ஆடிப்பிறப்பு இன்று !!!

{[['']]}
ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.)
இன்றைய நாளில் (விசேடமாக இலங்கையில்) ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டை போன்ற உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழப்படுகின்றது
ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.) தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. அதுவும், இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது. அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்கதினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன
 
பனங்கட்டி, கருப்பணி மற்றும் தேங்காய் என்று வடக்கு- கிழக்கில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கும் உணவு வகைகள் ஆதிக்கம் செலுத்தும் தனித்துவமான பண்டிகை.பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ். சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள். குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள் மிதக்கும் தேங்காய் துண்டுகளின் ருசிக்காக.




ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறார்.
ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது. தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. ஆனால், ஈழத்தமிழர்களுக்கேயுரிய தனித்துவமான பண்டிகையான ஆடிப்பிறப்பு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இன்று ஆடிப்பிறப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று தமிழ் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது. பும்பெயர்தவர்களில் பலருக்கு இன்று ஆடிப்பிறப்பு என்றே தெரியாது.
இதுவெல்லாம் எம்முடைய தனித்துவ பாரம்பரியத்தை நாம் இலகுவில் எந்தவித குற்றவுணர்வுமின்றி மறக்கின்றோம் என்பதற்கு நல்லதொரு சான்று.
இந்த ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் இப்படிப் பாடுகின்றார்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

Share this game :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Calendar - All Rights Reserved
Published by Eelanila.com